பெஞ்சமின் பிராங்க்ளின்...தலைசிறந்த எழுத்தாளர். ஆனால் எப்படி அவர் எழுத்தாளர் ஆனார்? | Tamil Metro Net

 

இளவயதில் அவருக்கு எழுத வராது. அவரது அண்ணன் நல்ல எழுத்தாளர். அவருக்கு அசிஸ்டன்ட் ஆக சேர்ந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின். அண்ணன் மாதிரி எழுத்தாளர் ஆகவேண்டும் என ஆசை. தனக்கு தானே எழுத கற்பித்துக்கொள்வது என முடிவெடுத்தார்.

ஸ்பெக்டேட்டர் எனும் பத்திரிக்கை அப்போது வெளிவந்துகொன்டிருந்தது. அதை வாங்கி அதில் உள்ள கட்டுரையை தேர்ந்தெடுத்து அதை சில வரிகளில் சுருக்கி எழுதுவார் பெஞ்சமின் பிராங்க்ளின். பிறகு இரண்டுநாள் கழித்து அந்த சுருக்கு எழுதிய பத்தியை எடுப்பார். கட்டுரையை நினைவில் கொண்டுவர முயல்வார். அதன்பின் நினைவில் இருப்பது, கதை சுருக்கம் இரண்டையும் வைத்து கட்டுரையை தானே எழுத முயல்வார்.
அதன்பின் மூலகட்டுரையுடன் தன் கட்டுரையை ஒப்பிடுவார். இரண்டுநாள் கழித்து மீண்டும் எழுத முயல்வார். இப்படியே தொடர்ந்து பயிற்சி எடுத்து அவருக்கு எழுதவந்துவிட்டது. அதன்பின் மூலகட்டுரையை விட சிறப்பாக கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார்.
கவிதை எழுதினால் கட்டுரை எழுதும் திறன் மேம்படும் எனவும் கண்டறிந்தார் பிராங்க்ளின். கவிதை எழுதுவது எளிய விசயம் அல்ல. சொல்லவரும் விசயத்தை அழகான வார்த்தைகள், எதுகை,மோனை உள்பட விதிகளுக்கு கட்டுபட்டு எழுதவேண்டும். நிறைய புதிய சொற்களை கற்கவேண்டும். அதன்பின் ஸ்பெக்டேட்டர் கட்டுரைகளை கவிதையாக எழுத ஆரம்பித்தார்.
இப்படித்தான் மார்க் ட்வெய்னும் பயிற்சி எடுத்தார்.
ஒரு நாவலை எழுத ஆரம்பிப்பார். அதை எழுதிமுடித்துவிட்டு அதில் உள்ள ஒரு கட்டத்தை தேர்ந்தெடுத்து "இந்த இடத்தில் இந்த கதாபாத்திரம் இப்படி செய்வதுக்கு பதில் இப்படி செய்தால் என்ன ஆகும்?" என யோசித்து கதையை மாற்றி எழுதுவார். அதன்பின் இரு வெர்சன்களையும் ஒப்பிட்டுபார்ப்பார்.
அவரது புகழ்பெற்ற ஹக்கிள்பெர்ரி பின் நாவலை இப்படி மாற்றி, மாற்றி எழுதி, எழுதி அவர் வெறுத்தே போய்விட்டார். நாவல் எழுதுவதை நிறுத்தும் அளவுக்கு வெறுப்பு வந்தது. அதை இப்படி எழுதிமுடிக்க 10 ஆண்டுகள் ஆனது. ஆனால் அது வெளிவந்ததும் உலக இலக்கியங்களில் ஒன்றாக இடம்பிடித்தது.
இந்த உத்தியை பயன்படுத்தினால் எழுத்து மட்டும் அல்ல, எந்த துறையிலும் நிபுணத்துவம் பெறலாம்
- நியாண்டர் செல்வன்
புதியது பழையவை